அரும்பாக்கம் போலீஸ் நிலையம் முற்றுகை அ.தி.மு.க., வியூக வகுப்பாளர்கள் விடுவிப்பு
அரும்பாக்கம்: போதை பொருள் வழக்கில் அ.தி.மு.க., வியூக வகுப்பாளர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து, அக்கட்சியினர் அரும்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் விடுவித்தனர். பாடியை சேர்ந்த தியேனேஷ்வரன், 26, என்பவர், திருமங்கலத்தில், போதை பொருள் வழக்கில் இம்மாதம், 19ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், முகமது மஸ்தான் சர்புதின், 40, சீனிவாசன், 25, சரத், 30, ஆகியோர் சிக்கினர். இவர்களிடமிருந்து, 27.91 லட்சம் ரூபாய், 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் அ.தி.மு.க., வியூக வகுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 'பிரமான்யா' நிறுவனத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத், சாய் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இருவரையும் பிடித்து விசாரித்தனர். அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரிப்பதாக தெரியவந்ததும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலர்கள் சத்யா, ஆதிராஜாராம், பாலகங்கா உட்பட, 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் அங்கு கூடினர். பின், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.,வினர் கொடுத்த கடும் அழுத்தத்தைத் தொடர்ந்து, ஹரிபிரசாத், சாய் இருவரையும் போலீசார் விடுவித்தனர். அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலர் பாலமுருகன் கூறுகையில், ''கட்சியின் வியூக வகுப்பு டீமில் இருப்போரை, போலீசார் துன்புறுத்தும் நோக்கோடு பிடித்து வந்து விசாரித்தது சட்டவிரோதம். அரசின் துாண்டுதலின் பேரில் நடந்துள்ளது,'' என்றார். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறுகையில், ''இப்படியெல்லாம் செய்வதால், அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபடுவோர் ஓடிவிடுவர் என நினைத்து போலீஸ் தரப்பில் அச்சுறுத்துகின்றனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இப்படி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரை தண்டிப்போம்,'' என்றார். இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட 27 லட்சம் ரூபாய், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என தெரிய வரவே, இந்த விவகாரத்தை அடுத்து எப்படி அணுகுவது என புரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.