உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 சதவீத இடஒதுக்கீடு கோரி அருந்ததியர் ஆர்ப்பாட்டம்

7 சதவீத இடஒதுக்கீடு கோரி அருந்ததியர் ஆர்ப்பாட்டம்

சென்னை : 'அருந்ததியர் இடஒதுக்கீடு போராட்ட இயக்கம் சார்பில், அருந்ததியர் சமூகத்தினருக்கான உள் இடஒதுக்கீட்டை, 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என வலியுறுத்தி, சென்னை சிவானந்தா சாலையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இது குறித்து, இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப் பாளர் லோகேஷ்குமார் கூறியதாவது: நாடு முழுதும் பட்டியலின இடஒதுக்கீட்டை வகைப்படுத்தி, முறையாக அமல்படுத்த, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள், இந்த தீர்ப்பை பின்பற்றி, தங்கள் மாநிலங்களில் பட்டியலின இடஒதுக்கீட்டை வகைப்படுத்தி, இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால், பாதிக்கப்படுவது நாங்கள் தான். அருந்ததியர் சமூகத்தில் உள்ள ஏழு பிரிவில், 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளோம். ஆனால், அரசு தரப்பில் எங்களுக்கு வழங்கப் பட்ட உள் இடஒதுக்கீடு, 3 சதவீதம். எனவே, அருந்ததியர் சமூக மக்களின் பொருளாதார நிலை, கல்வியறிவு மற்றும் மக்கள் தொகையை கருத்தில் வைத்து, உள் இடஒதுக்கீடை, 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எங்களுக்கான உள் இடஒதுக்கீட்டை, தமிழக அரசு முறையாக வழங்காவிட்டால், அடுத்த மாதம், சென்னையில் பேரணி நடத்தி, அடுத்தகட்ட போராட்டங்களை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி