சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மார்கழியில் ஆருத்ரா, ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தண்டு ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.நடராஜர் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீட்சிதர் காலை 6:50 மணிக்கு கொடியேற்றி உற்சவத்தை துவக்கி வைத்தார்.10 நாட்கள் நடைபெறும் விழாவில், இன்று (5ம் தேதி) வெள்ளி சந்திரபிரபை வாகனத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி தங்க சூரியபிரபை, 7ம் தேதி வெள்ளி பூத வாகனம், 8ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான், 9ம் தேதி வெள்ளி யானை வாகனம், 10ம் தேதி தங்க கைலாச வாகனம், 11ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர், வெட்டுக்குதிரையில் வீதி உலா நடக்கிறது.முக்கிய விழாவான தேரோட்டம் 12ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து நான்கு வீதிகள் வழியாக இழுத்து செல்வர். மறுநாள் 13ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் 6:00 வரையில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, சொர்ணாபிஷேகம், சித்சபையில் ரகசிய பூஜையும் நடக்கிறது.பஞ்சமூர்த்தி வீதியுலாவை தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு மேல் 3:00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. 14ம் தேதி, முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 15ம் தேதி இரவு, 30 ஆண்டுகளுக்கு பின் ஞானப்பிரகாசம் குளத்தில், தெப்ப உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.