உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாணிப கழக கிடங்கில் 1,538 டன் அரிசி வீண் சட்டசபை குழு ஆய்வில் அதிர்ச்சி

வாணிப கழக கிடங்கில் 1,538 டன் அரிசி வீண் சட்டசபை குழு ஆய்வில் அதிர்ச்சி

தஞ்சாவூர்:தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், பயன்படுத்த தகுதியற்ற, 1,538 டன் ரேஷன் அரிசி இருந்தது தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், அதன் தலைவர் எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையில், தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில், தமிழக நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் நேற்று ஆய்வு நடத்தினர். கிடங்கில் ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த அரிசி மூ ட்டைகளை ஆய்வு செய்த போது, பல மூட்டைகளில் இருந்த அரிசி வீணாகி இருந்தது. உடனே, நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாட்டு அலுவலர் அருண் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் செல்வத்திடம் விசாரித்தனர். கடந்த, 2022ல் அரவை செய்யப்பட்ட அரிசிகள், பயன்படுத்த முடியாதது என, உணவு கழகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகள் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக்கேட்டு, 'உடனே அரிசியை அரவை ஆலைக்கு ஏன் திருப்பி அனுப்பவில்லை. உடனே முழு விபரங்களை தர வேண்டும், இல்லாவிட்டால் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, பொது நிறுவனங்கள் குழுவினர் கூறி சென்றனர். ஆய்வுக்கு பின் நந்தகுமார் கூறியதாவது: பிள்ளையார்பட்டி சேமிப்பு கிடங்கில், 2022ம் ஆண்டு இருப்பு வைக்கப் பட்ட, 1,538 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாததால், அந்த அரிசியை கால்நடை தீவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். மூன்றாண்டுகளாக சேமிப்பு கிடங்கிலேயே அரிசி மூட்டைகளை வைத்தது ஏன் என்பது குறித்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அரிசியை உரிய காலத்தில் வினியோகம் செய்யாமல், அதன் தரம் குறைய காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

gopi Ananthi
ஆக 23, 2025 09:08

TNCSC தகுந்தமுறையில் செயல்படவில்லை NCCF நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம்.


R.RAMACHANDRAN
ஆக 22, 2025 07:50

ஒரு கிடங்கில் 1538 டன் வீண் என்றால் தமிழகம் முழுதும் உள்ள கிடங்குகளில் எவ்வளவு அரிசி வீணாக்கப் பட்டிருக்கும்.


Mani . V
ஆக 22, 2025 05:32

வாணிப கழக கிடங்கில் 1,538 டன் அரிசி வீணானதாகத்தான் செய்தி உண்டேயன்றி, இதுவரையில் எந்த டாஸ்மாக்கிலாவது ஒரு சொட்டு சரக்கு வீணானதாகத் தகவல் உண்டா? அப்பா ஆட்சியின்னா சும்மாவா?


Ganesh
ஆக 22, 2025 10:02

என்னங்க நீங்க விவரம் தெரியாம இருக்கீங்க? அரிசி யாரோ வரி கட்டுறவன் காசு, சரக்கு அப்படியா சில மந்திரிங்களோட மற்றும் அவுங்களோட குடும்பத்தோட ரத்தம் சார்... அவுங்க ரத்தம் சிந்தி அனுப்புற சரக்க வீணாடிப்போமா? இந்த மாதிரி கோடௌன் அதிகாரி, அவுங்க மேலாதிகாரி, அமைச்சர்களை ஒரு மாசம் பட்டினி போட்டு இந்த கோடௌன் ல கொண்டு போய் விடணும்...