சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து, இரண்டு கார்களில் சென்னைக்கு கடத்தி வந்த, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'கோகைன்' என்ற போதைப் பொருளை, 10 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற வனத்துறை அதிகாரி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கும்பல், சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வந்துள்ளதாக, என்.ஐ.பி., - சி.ஐ.டி., எனப்படும் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, ஐ.ஜி., செந்தில்குமாரி தலைமையிலான தனிப்படை போலீசார், கடத்தல் கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று காலையில், சென்னை கிண்டி அருகேயுள்ள பரங்கிமலை பகுதியில், சந்தேகப்படும்படியான கார் ஒன்று செல்வதை உறுதி செய்தனர். இதையடுத்து, சினிமா பாணியில் அந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், 1 கிலோ கோகைன் போதைப் பொருள் சிக்கியது. இதையடுத்து, காரில் இருந்த மகேந்திரன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ரேஞ்சில் வனக்காப்பாளராக பணிபுரிவது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின்படி, பரங்கிமலை பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த அவரின் கூட்டாளிகள் நான்கு பேர், துப்பாக்கி முனையில் சிக்கினர்.அவர்களிடம் விசாரித்த போது, மற்றொரு கடத்தல் கும்பல், கோயம்பேடு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பரங்கிமலையில் பிடிபட்ட ஐந்து பேரையும் கோயம்பேடு பகுதிக்கு அழைத்து சென்று, அங்கு பதுங்கியிருந்த மூன்று பேரை பிடித்தனர். அவர்களின் காரில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கோகைனையும் பறிமுதல் செய்தனர். பரங்கிமலை, கோயம்பேடு பகுதிகளில் பிடிபட்ட எட்டு பேரும், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்தவர்கள். வனக்காப்பாளர் மகேந்திரன் அளித்துள்ள வாக்குமூலம்:
என் உறவினர் பாண்டி என்பவர், ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்த போது, அங்கு கிடந்த 1 கிலோ கோகைன் பாக்கெட்டை எடுத்து என்னிடத்தில் கொடுத்தார். அதேபோல, பழனீஸ்வரன் என்பவரும், கடற்கரையோரத்தில் கிடந்த 1 கிலோ கோகைன் பாக்கெட்டை எடுத்து கொடுத்தார். இரண்டு கிலோ கோகைன் மதிப்பு, 6 கோடி ரூபாய். சென்னையில் 10 கோடி ரூபாய்க்கு விற்கலாம் என்று என் கூட்டாளி காசிம் தெரிவித்தார். இதையடுத்து, நானும், பாண்டி, 32; முகமது முபாரக், 35; எட்வர்ட் சாம், 26; முகமது இட்ரீஸ், 65; காஜா மொய்தீன், 75; பழனீஸ்வரன், 22; காசிம், 39, ஆகியோரும் இரண்டு குழுக்களாக, இரண்டு கார்களில் சென்னைக்கு கோகைனை கடத்தி வந்து விற்க முயன்றோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதையடுத்து, மகேந்திரன் உட்பட எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கோகைன், இரண்டு கார்கள், எட்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் சோதனை
கடற்கரையோரம் கிடைத்தது போதைப்பொருள் தானா என மகேந்திரன் உள்ளிட்டோருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், மதுரையில் உள்ள ஒரு கும்பலிடம் கொடுத்து, சோதனை செய்துள்ளனர். அதில், இது முதல் தரமான கோகைன் என்றும், பல கோடி ரூபாய்க்கு விற்கலாம் என்றும் தெரிய வந்தவுடன், சென்னைக்கு வந்துள்ளனர்.