ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார்கோயில் ரோட்டில், காயத்துடன் வந்த, ஒரு அடி உயரம் கொண்ட சருகுமானை, ஆட்டோ டிரைவர் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். விருதுநகர் மாவட்டம், மாலையாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் இளையராஜா. இவர் நேற்று முன்தினம், இரவு 10 மணிக்கு, அய்யனார்கோயில் ரோட்டில் ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்தார். காயத்துடன் ஆட்டோ குறுக்கே வந்த சருகுமானை மீட்ட அவர் , வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ரேஞ்சர் பாலசுப்பிரமணியன், பாரஸ்டர் செல்லமணி, சருகுமானுக்கு சிகிச்சை அளித்து, அவுட்போஸ்ட்டில் வைத்திருந்தனர். இதைதொடர்ந்து நேற்று காலை, சப்பாணிபிரம்பு வனப்பகுதிக்குள் விட்டனர். வன உயிரியலாளர் பார்த்திபன், ''மேற்கு தொடர்ச்சி மலை, சாம்பல் நிற அணில் சரணாலயத்தில், புள்ளி, மிளா, கேழையாடு, சருகு என நான்கு வகை மான்கள் உள்ளன. காயத்துடன் மீட்கப்பட்டது அரியவகை விலங்கான சருகுமான். ஒரு அடி உயரம் கொண்ட இந்த மான், இரவில் மட்டுமே நடமாடும். கரையான், பழம், புள், இளந்தளிர்களை சாப்பிடும் இது, மர பொந்துகளில்தான் அதிகம் வாழும். இதன், ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள். மீட்கப்பட்ட சருகுமானுக்கு ஒரு வயது இருக்கும்,'' என்றார்.