மேலும் செய்திகள்
உளவுத்துறைக்கு இரண்டு ஐ.பி.எஸ்.,கள் நியமனம்
07-May-2026
சென்னை: தமிழக காவல் துறையில் உளவுத்துறை ஐ.ஜி.,யாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்ரா கர்க், 46. தமிழக காவல் துறையின், 2004ம் ஆண்டு, ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், 2008 - 2010 வரை, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். மதுரை மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்தபோது, பல்வேறு எதிர்ப்பு களையும் மீறி, உத்தப்புரம் பகுதியில் தீண்டாமைச் சுவரை அகற்றினார். தென் மண்டல ஐ.ஜி., சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் என, பல்வேறு முக்கிய பொறுப்புகளில், அவர் பணியாற்றி உள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. அது குறித்து, சிறப்பு புலனாய்வு குழு தலைவராக, முந்தைய தி.மு.க., ஆட்சியில், அஸ்ரா கர்க் நியமிக்கப் பட்டார். தற்போது, வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக பணிபுரிந்து வரும் அஸ்ரா கர்க், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியில், உளவுத் துறை ஐ.ஜி.,யாக நேற்று நியமிக்கப்பட்டார். அங்கு பணிபுரிந்த அவினாஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் மணிவாசன் பிறப்பித்துஉள்ளார்.
07-May-2026