உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைகளில் மளிகை கட்டாய விற்பனைக்கு தடை

ரேஷன் கடைகளில் மளிகை கட்டாய விற்பனைக்கு தடை

சென்னை:'மளிகை பொருட்களை, கார்டுதாரர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே வழங்க வேண்டும்; கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது' என, ரேஷன் கடை ஊழியர்களை, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை, சர்க்கரை; சிறப்பு பொது வினியோக திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப் படுகின்றன. மேலும், மளிகை, சமையல் எண்ணெய் உள்ளிட்டவையும் விற்கப்படுகின்றன. இவற்றை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. சில கடைகளில் அவை விற்றது போக, மீதி கையிருப்பில் உள்ளன. இதனால், ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம் மளிகையை, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி விற்கின்றனர். இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடையை நடத்தும் சங்கங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கவே, மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்குவதும், வாங்காததும் கார்டுதாரர்கள் விருப்பம். தீபாவளிக்கு அனுப்பப்பட்ட சிறப்பு மளிகை தொகுப்புகளில் விற்பனையாகாமல் இருப்பதை, திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே, கடைக்கு வருவோரிடம் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என்றும், அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக, கடைகளில் நோட்டீஸ் ஒட்டுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
நவ 24, 2024 06:55

அரிசியை இலவசமாக கொடுப்பது போல மளிகை மற்றும் அழகு சாதனா பொருட்களை இலவசமாக கொடுத்தால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவர்.இலவசமாக கொடுப்பதற்கே ரேஷன் கடைகள் என்றாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு கடைக்கும் குறியீடு நிர்ணயித்து மளிகை மற்றும் அழகு சாதனா பொருட்கள் ஆகியவற்றை வற்புறுத்தி இறக்கிவிட்டு அவற்றை விற்றுத் தீர்க்க வேண்டும் இன்றேல் விற்பனையாளர்கள் அவற்றிற்கான தொகையை கட்ட வேண்டும் என நிர்பந்திப்பதால் மக்களை வற்புறுத்தி விற்கின்றனர்.அவற்றை திருப்பி அனுப்ப கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது மக்களையும் செய்தி தாள்களையும் ஏமாற்றும் வேலை.ரேஷன் கடைகள் அரசாங்கத்தினுடையது என்ற நிலையில் அதில் பணியாற்றுபபவர்களை கொத்தடிமைகளாக நடத்த கூட்டுறவுத் துறையிடம் விடப்பட்டுள்ளது.


புதிய வீடியோ