அஜித் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை
சென்னை : நடிகர் அஜித் நடித்த, குட் பேட் அக்ளி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில், நடிகர் அஜித் நடிப்பில், குட் பேட் அக்ளி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில், தான் இசையமைத்த 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில், '5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீசுக்கு, சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக, பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளித்துள்ளது. 'ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, குட் பேட் அக்ளி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததோடு, மனுவுக்கு பட தயாரிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.