UPDATED : மார் 19, 2024 10:11 AM | ADDED : மார் 19, 2024 06:37 AM
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பரமக்குடியில் நடந்த வாகன சோதனையின் போது கார்களில் கொண்டு சென்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி படங்கள் அச்சிட்ட பனியன்கள் மற்றும் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்தை தேர்தல் அலுவலர்கள், போலீசார் பறிமுதல் செய்தனர்.பனியன்கள்
திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்ட்டில் பறக்கும் படை அலுவலர் வீரராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவகோட்டையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற காரை சோதனை செய்ததில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ஸ்டாலின், உதயநிதி படம் போட்டு, ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி என அச்சடிக்கபட்டிருந்த 47 பனியன்கள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பனியன் குறித்து ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க., தகவல் தொழில் நுட்ப இளைஞர் அணி செயலாளர் கண்ணன், பணம் தொடர்பாக ராமநாதபுரம் பவுசுல்லாவிடம் விசாரிக்கின்றனர்.மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படை அலுவலர் கோட்டைராஜா தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் மறைத்து வைத்திருந்த ரூ.97 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பாம்பனை சேர்ந்த கோமதியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.பரமக்குடி:
பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் பகுதியில் பறக்கும் படை அலுவலர், தாசில்தார் வரதன் தலைமையில், டவுன் போலீஸ் எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விளத்துாரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற காரில் ஆவணம் ஏதுமின்றி ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து விளத்துார் பார்த்திபனிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து பரமக்குடி தலைமையிடத்து தாசில்தார் சீதாலட்சுமியிடம் ஒப்படைத்தனர். பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டு உரிய ஆவணங்களை சமர்பித்தால் திருப்பி தரப்படும் என அதிகாரிகள் கூறினர்.