| ADDED : நவ 20, 2025 01:07 AM
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் ஆகிய வசதிகள், கூட்டத்துக்கு தகுந்த மாதிரி இல்லாமல் மிகவும் குறைவாக உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால், அதற்கு தகுந்தவாறு கேரள அரசும், தேவசம் போர்டும் இணைந்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். காவல் துறையினருக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்ல, 10 மணி நேரம் முதல், 15 மணி நேரமாகிறது. மண்ட ல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் பக்தர்களால் அதிகமான வருமானம் வருகிறது. அந்த வருமானத்தை கொண்டு, கோவிலுக்கு நிறைய அடிப்படை வசதிகளை உருவாக்கி தர முடியும். ஆனால், வருவாயை மட்டும் எடுத்துக் கொண்டு, பக்தர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அரசு உள்ளது. குறிப்பாக, இந்தாண்டு அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்திருக்கிறது. எனவே, தேவசம் போர்டும், கேரள அரசும் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து, அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், உரிய அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.