உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை துவக்க மசோதா தாக்கல்

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை துவக்க மசோதா தாக்கல்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை துவங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கலைஞர் பல்கலை உருவாக்குவதற்கான சட்ட மசோதா, நேற்று தாக்கல் செய்யப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மசோதாவை தாக்கல் செய்தார்.மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தச் சட்டம், 2025ம் ஆண்டு கலைஞர் பல்கலைக்கழக சட்டம் என அழைக்கப்படும். அதன்படி, கலைஞர் பல்கலை அமைக்கப்படும். அரியலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கி, இந்த பல்கலை செயல்படும். இதன் தலைமையகம், கும்பகோணம் நகராட்சி எல்லைக்குள்ளோ அல்லது அதை சுற்றியுள்ள, 25 கி.மீ.,க்குள் அமைக்கப்படும். தமிழக முதல்வர், பல்கலை வேந்தராக இருப்பார். அதிகார அமைப்புகளுக்கு நபர்களை நியமிப்பதற்கான அதிகாரம், வேந்தருக்கு வழங்கப்பட்டு உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர், இணை வேந்தராக இருப்பார். வேந்தர் செயல்பட இயலாத போது, இணை வேந்தர் தான், அனைத்து கடமைகளையும் ஆற்ற வேண்டும்.அரியலுார், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய, மாநிலத்தின் பெரும் பகுதிகளை கொண்ட ஒரே பல்கலையாக, பாரதிதாசன் பல்கலை உள்ளது. டெல்டா மாவட்ட கடலோர பகுதி மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்வதில், அந்த பல்கலை கடினப்படுகிறது. மேலும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடையே அதிகரித்து வரும் உயர் கல்வி தேவைகளை நிறைவு செய்வதற்கும், டெல்டா பகுதியை சேர்ந்த பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புதிய பல்கலை நிறுவுவது அவசியம். அரியலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய, நான்கு மாவட்டங்களில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக, உலக தரம் வாய்ந்த வசதிகளையும், அறிவுப் பரப்புதலையும், இந்த புதிய பல்கலை வழங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை