உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமொழிக்கு எதிராக அவதுாறு கருத்து பா.ஜ., நிர்வாகி எச்.ராஜாவுக்கு ஓராண்டு சிறை

கனிமொழிக்கு எதிராக அவதுாறு கருத்து பா.ஜ., நிர்வாகி எச்.ராஜாவுக்கு ஓராண்டு சிறை

சென்னை, சமூக வலைதளத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி குறித்து அவதுாறு கருத்து தெரிவித்தது; ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவோம் என, பதிவு வெளியிட்டது தொடர்பான இரண்டு வழக்குகளில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு, தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த 2018 ஏப்ரலில், தன் சமூக வலைதள பக்கத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழியை அவமதிக்கும் கருத்துடன் பதிவு வெளியிட்டிருந்தார்.

புகார்

அத்துடன், 'திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, தமிழகத்தில் நாளை ஈ.வெ.ரா., சிலையை அகற்றுவோம்' என்றும், 2018 மார்ச்சில் மற்றொரு பதிவு வெளியிட்டிருந்தார்.இவ்விரு கருத்துக்கள் தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். அதன்படி, ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலையங்களில், எச்.ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இவ்வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எச்.ராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்க வசதியாக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.இதையடுத்து, ஈரோட்டில் இருந்து இவ்வழக்குகள் மாற்றப்பட்டு, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் விசாரணை துவங்கியது. போலீஸ் தரப்பில், அரசு சிறப்பு பிளீடர் பி.வாஷிங்டன் தனசேகரன் ஆஜராகி, ''மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகளான எம்.பி., கனிமொழி மீது, தமிழக மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது, எச்.ராஜாவின் கருத்து, அவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ''அதேபோல, பெரியாருக்கு எதிரான கருத்து, அவரை பின்பற்றுபவர்கள் மத்தியில் பதற்றத்தையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் உள்ளது,'' என்றார்.எச்.ராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆனந்த பத்மநாபன், வழக்கறிஞர் என்.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர்.'இந்த வழக்கில், அரசியல் சார்பு இல்லாத எந்தவொரு சாட்சியும் விசாரிக்கப்படவில்லை. முறையான சான்றுகளுடன், சமூக வலைதள பதிவு தாக்கல் செய்யப்படவில்லை. 'யாரையும் குறிப்பிட்டோ அல்லது அச்சுறுத்தும் விதமாகவோ, சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிடவில்லை. 'எனவே, இந்த வழக்குகளில் இருந்து, எச்.ராஜாவை விடுதலை செய்ய வேண்டும்' என்று, அவர்கள் வாதாடினர்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல், நேற்று அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:இரண்டு வழக்குகளிலும், எச்.ராஜா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. அவருக்கு தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் மொத்தம், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.

நிறுத்திவைப்பு

தீர்ப்பு வழங்கிய போது, எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். தீர்ப்பை கேட்டதும், அவரது தரப்பு வழக்கறிஞர்கள், 'இந்த தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று முறையிட்டனர். அதை ஏற்ற நீதிபதி, தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

'சட்டப்படி எதிர்கொள்வேன்!'

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த எச்.ராஜா, ''இந்த தீர்ப்பால் என் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. சட்ட ரீதியாக, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்கொள்வேன். தி.மு.க.,வுக்கு எதிரான போராட்டம் தொடரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை