நுாறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க பா.ஜ., அரசு முயற்சி
கோவை: 'நுாறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பா.ஜ.,வின் நோக்கமாக உள்ளது' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கோவையில் அவர் அளித்த பேட்டி:
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு, காந்தியின் பெயரை மாற்றி, தரம் தாழ்ந்த அரசியலை பா.ஜ., அரசு நடத்துகிறது. காந்தியை சிறுமைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கி வந்த நிதியை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இதை கண்டித்து, தி.மு.க., கூட்டணி சார்பில் வரும் 24ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், வி.சி., கட்சி பங்கேற்கிறது. விரைவில் 234 தொகுதிகளுக்கும், தொகுதி மாவட்ட செயலர்களை அறிவிக்க உள்ளோம். நாடு முழுதும் ஹிந்துத்துவ மயம், சமஸ்கிருத மயம் என்பதில் பா.ஜ., அக்கறை காட்டுகிறது. திருப்பரங்குன்றத்தில் இளைஞர் தற்கொலை செய்தது, பா.ஜ.,வின் மத வெறி அரசியலுக்கு முதல் களப்பலி. இன்னும் என்னென்ன செய்யப் போகின்றனரோ தெரியவில்லை. தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறையால், மக்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இது, நாட்டுக்கு ஆபத்தானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.