உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வசூலித்த பணத்தை திருப்பி தராவிட்டால் பா.ஜ., போராடும்

வசூலித்த பணத்தை திருப்பி தராவிட்டால் பா.ஜ., போராடும்

தஞ்சாவூர்:''தஞ்சையில் தெருவோர கடைகள் நடத்த ஆளும்கட்சியினர் ஏழை வியாபாரிகளிடம் வசூலித்த பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்; இல்லையென்றால், போராட்டம் நடத்தப்படும்,'' என, பா.ஜ., மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தஞ்சையில் தீபாவளி பண்டிகையொட்டி தெருவோரக்கடைகள் நடத்த ஒரு கடைக்கு 40 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளனர். கடைகள் நடத்த அனுமதி அளிக்கும் எந்தவித தீர்மானமும் மாநகராட்சியால் நிறைவேற்றப்படவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்ளே, கடையை நடத்த அனுமதித்து பணத்தை வசூல் செய்துள்ளனர். பின், அதை பங்கு பிரித்துள்ளனர். இந்நிலையில், சாலையோர கடைகள் நடத்த அனுமதி கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் இதுபோன்ற கடைகள் நடத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆனால், கடைகள் நடத்தும் ஆவலோடு, ஆளும்கட்சியினரிடம் பணம் செலுத்திய ஏழை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ., சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.தஞ்சை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு முறைகேடு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தஞ்சை திலகர் திடல், காந்திஜி வணிக வளாகம் உள்ளிட்ட மாநகராட்சிக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், உரிய அனுமதி பெறாமல் பட்டாசு கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வசூலிக்கப்பட்ட தொகையும் மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்தும் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பா.ஜ., சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முருகானந்தம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை