நெல்லை, புதுச்சேரியில் வெடிகுண்டு மிரட்டல்
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவமனை குண்டு வெடித்து தரைமட்டமாகும் என, போனில் மிரட்டல் விடுத்த போதை நபர் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பல்நோக்கு பிரிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், கட்டடம் தரை மட்டமாகிவிடும் எனவும், நேற்று முன்தினம் மாலை திருநெல்வேலி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போனில் மிரட்டல் விடுத்தார்.போலீசார், மருத்துவமனை வளாகம் முழுதும் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண்ணை வைத்து, உவரியை அடுத்த குஞ்சன்விளையைச் சேர்ந்த முத்து பெருமாள், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற, உதவியாளர் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். முத்து பெருமாளும் திருப்பி அனுப்பப்பட்டார். இந்த ஆத்திரத்தில், அவர் போதையில் மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.அதே போல, புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு இ -- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.