வேன் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
தேவக்கோட்டை: தேவகோட்டை அருகே டெம்போ வேன் மீது கார் மோதியதில் தந்தை மகள்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 9 மலேசிய நாட்டினர் உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி்கப்பட்டு உள்ளனர்.மலேசிய நாட்டில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு டெம்போ வேனில் சென்றனர். அதே சமயத்தில் தஞ்சாவூர் காந்தி நகர் பகுதியில் இருந்து பவுல் டேனியல் (38), அவரது மகள்கள் சூசன்ரெகுமா (10), ஹெலன் சாமா (7), சித்தப்பா மைக்கேல் (63) ஆகிய 4 பேர் உறவினர் விசேஷத்துக்காக காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆண்டா ஊரணிக்கு சென்று கொண்டிருந்தனர். தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேன் மீது கார் நேருக்கு, நேர் மோதியது. இதில் காரில் இருந்த பவுல் டேனியல், சூசன் ரேமா, ஹெலன் சாமா, மைக்கேல் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் 9 மலேசிய நாட்டினர் காயமடைந்தனர். கிராம மக்கள் அவர்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவகோட்டை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.