சென்னை: 'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, போதைப் பொருள் வழக்கிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த கவர்னர் ரவி, தி.மு.க., அரசின் தீவிர நடவடிக்கையை கொச்சைப்படுத்தலாமா' என, அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் கவர்னர் ரவி, 'தமிழக போலீசார், 1 கிராம் கூட ரசாயன போதைப் பொருட்களை பறிமுதல் செய்யவில்லை. குற்றச்சாட்டு
கடந்த மூன்று ஆண்டு களில் கஞ்சாவை மட்டுமே பிடித்துள்ளனர்' என, வழக்கம் போல் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின்தான் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போதையில்லா தமிழகத்தை உருவாக்க, நேர்மையான நடவடிக்கைகளை, முதல்வரே முன்னின்று எடுத்து வருகிறார். வரலாற்றிலேயே முதன்முறையாக போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக, கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் துறை மூத்த அதிகாரிகளின் முதல் மாநில மாநாட்டை, 2022 ஆக., 10-ல் முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். இப்படியொரு மாநாட்டை, அ,தி.மு.க., ஆட்சியில் நடத்தவே இல்லை. தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படுவது அறவே ஒழிக்கப்பட்டு, பூஜ்ஜிய சாகுபடி என்ற நிலையை எட்டியிருக்கிறோம். போதைப்பொருள் தொடர்பாக, 2022-ம் ஆண்டு முதல் இதுநாள் வரை, 1,682 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழிப்புணர்வு வீடியோ
போதைப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 3,914 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2022 ஆக., முதல் 2024 ஆக., வரை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் 18 கோடியே 3 லட்சம் ரூபாய் சொத்துக்களும் 8,949 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.போதைப் பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோ, ஒன்றரை கோடி மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களில், 18,000க்கும் மேற்பட்ட, 'போதைக்கு எதிரான குழுக்கள்' உருவாக்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில், குட்கா விற்பனைக்கு அமைச்சர்களே துணையாக இருந்து வழக்கில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீதான வழக்குக்கு அனுமதி கொடுக்கும் கோப்பை கூட, ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்த கவர்னர், போதைப்பொருள் ஒழிப்பு பற்றி இப்போது வாய்கிழிய பேசுவது, விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.போதைப் பொருள் ஒழிப்பில், தி.மு.க., அரசின் தீவிர நடவடிக்கையைக் கொச்சைப்படுத்திப் பேசும் தார்மீக உரிமை கவர்னருக்கு இருக்கிறதா என, கேட்க விரும்புகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.