உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் உதவியாளருக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் உதவியாளருக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : சிவகங்கை மாவட்ட சாலைப் பணிக்கு தமிழக அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு டெண்டர் வழங்கியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மறு டெண்டர் நடத்த உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் பெரியகிளுவாச்சி கந்தசாமி தாக்கல் செய்த மனு:நான் அங்கீகரிக்கப்பட்ட முதல்நிலை கான்ட்ராக்டர். சிவகங்கை மாவட்டம் கீழையூர்- தாயமங்கலம், சாலைகிராமம்-சருகணி வரை சாலையை பலப்படுத்த மதுரை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் பிப்.,2 ல் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டார். மதிப்பு ரூ.175.40 லட்சம். டெண்டரில் பங்கேற்க நானும், சிலரும் விண்ணப்பித்தோம். டெண்டர் பிப்.,28ல் உறுதி செய்யப்பட்டது. காரைக்குடி இளங்கோவிற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. எனது மற்றும் மற்றவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.எனக்கு போதிய தகுதி உள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் தனி உதவியாளர் இளங்கோ. சாலைப் பணிக்குரிய இயந்திரங்கள் உள்பட பிற கருவிகள் இளங்கோ பெயரில் இல்லை. அவர் அரசிடம் சம்பளம் பெறுகிறார். டெண்டரில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். டெண்டரில் பங்கேற்க அவருக்கு தகுதி இல்லை. டெண்டர் உறுதி செய்யப்பட்டதின் அடிப்படையில் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். டெண்டர் அறிவிப்பு மற்றும் அதை உறுதி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மறு டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்:டெண்டருக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதில் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவில்லை. டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மறு டெண்டர் நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ