சங்கரராமன் கொலை வழக்கு சாட்சி விசாரணை முடிந்தது
புதுச்சேரி : சங்கரராமன் கொலை வழக்கில், சாட்சிகள் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 24 பேரும், வரும் 18ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் மொத்தம் 370 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில்,189 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இதில், 80 சாட்சிகள், தாங்கள் ஏற்கனவே அளித்த சாட்சியத்தை மாற்றிக் கூறினர்.இவ்வழக்கு, நீதிபதி ராமசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட ரகு உள்ளிட்ட ஐந்து பேர் ஆஜராகினர். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான சக்திவேலிடம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் விசாரணை நடத்தினார். ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர்கள், சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். சக்திவேலிடம் நடத்தப்பட்ட விசாரணை, குறுக்கு விசாரணைகள், முதன்மை நீதிபதி ராமசாமி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.இவ்வழக்கில், சாட்சிகள் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு, நீதிபதி ராமசாமி ஒத்திவைத்தார். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும், வரும் 18ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம், சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்துவார். அதன் பின், இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதம் நடக்கும்.