வாசகர்கள் கருத்துகள் ( 1 )
That’s good to start new industries in Tamilnadu , but all these industry middle management and top management people are not from Tamilnadu from north states mostly junior works only for Tamilnadu peoples
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில், 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அடிக்கல் நாட்டிய ஸ்டாலின், டாடா குழும தலைவருக்கு புகழாரம் சூட்டினார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன; 31 லட்சம் பேருக்கு, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகனங்களின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது. முதல் முகவரி
இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல; உலகின் பெரிய நிறுவனங்களுக்கும், தமிழகம் தான் முதல் முகவரியாக விளங்குகிறது. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளதால், நம் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது. இது, மென்மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.டாடா குழுமம், தமிழகத்தில் கூடுதல் முதலீடுகளை செய்ய வேண்டும். தமிழகம் தான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம். அதுமட்டுமல்ல மின் வாகனங்களின் தலைநகரம். போர்டு, ஹூண்டாய், ரெனோ நிஸான் போன்ற சர்வதேச வாகன நிறுவனங்கள் இங்கே உள்ளன. டாடா நிறுவனம் போன்று, சர்வதேச மார்க்கெட்டில் விற்கப்படுகிற வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையும் இங்கு தான் உள்ளது. தமிழகம் நம்பர் ஒன்
இந்தியாவில் விற்கப்படும் மொத்த மின் வாகனங்களில், 40 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியிலும், இந்தியாவிலேயே தமிழகம் 'நம்பர் 1' ஆக இருப்பதுடன், நிடி ஆயோக் கொடுத்த ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டிலும், தமிழகம் தான் நம்பர் 1 ஆக இருக்கிறது.இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியாவிலேயே முதலீடுகள் செய்ய சிறந்த மாநிலமாக, தமிழகத்தை மேம்படுத்த வேண்டும். 31 லட்சம் பேருக்கு வேலை
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று, முதலீடுகளை ஈர்த்துள்ளோம். அதை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழக இளைஞர்களின் உயர்வுக்காக, நம் அரசு அனைத்தையும் செய்யும். அதற்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய அதிநவீன மோட்டார் வாகன உற்பத்தி ஆலையை, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது. இதில், 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இத்திட்டத்தில், 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்திற்கு, கடந்த மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆறு மாதத்திற்குள் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, ராஜா, எம்.பி., ஜெகத்ரட்சகன், தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண் ராய், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.
டாடா குழும தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் விழாவில், முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது:டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை பதவியில் இருப்பது, அவருக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கே பெருமை. வேளாண் குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்தார். இந்த அளவுக்கு அவர் உயர, அவரது தன்னம்பிக்கையும், அறிவாற்றலுமே காரணம். அவர் இந்திய இளைஞர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக விளங்குகிறார்; அத்தகைய தலைசிறந்த மனிதருக்கு என் வணக்கம்.இவ்வாறு அவர் பேசினார்.அத்துடன், சமூக வலைதளத்தில் முதல்வர் கூறியுள்ளதாவது:டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், எளிமையான பின்புலத்தில் இருந்து உயர்ந்து, இந்திய கார்ப்பரேட் உலகின் மதிப்புமிகு தலைவர்களில் ஒருவராக ஏற்றம் அடைந்துள்ளார். பலருக்கும் ஊக்கமாக விளங்கி வருகிறார். அவரது தலைமையின் கீழ், டாடா குழுமம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும், பெருமாற்றத்தையும் அடைந்துள்ளது. அவருடனான சந்திப்பின் போது, டாடா குழுமம் தமிழகத்தில் மேலும் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.அவர் கடந்த மூன்று ஆண்டுகளில், டாடா குழுமம் தமிழகத்தில் தங்கள் திட்டங்களை பெருமளவில் விரிவாக்கம் செய்ததை குறிப்பிட்டார். நம் அரசின் வேகத்தையும், எளிதில் அணுகக் கூடிய தன்மையையும், விரைவான இயக்கத்தையும் அங்கீகரித்தார். இதை பாராட்டுகிறேன்.நாங்கள் தொடர்ந்து இதேபோல, டாடா குழும நிறுவனங்களின் தேவைகளுக்கு உடனடியாக முழுமையாக செவிமடுப்பதோடு, எங்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, அனைத்து வழிகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க இணைந்து பணிபுரிவோம் என உறுதி அளிக்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக, அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
That’s good to start new industries in Tamilnadu , but all these industry middle management and top management people are not from Tamilnadu from north states mostly junior works only for Tamilnadu peoples