உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்

 ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்

சென்னை: த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் சம்பவத்தை அடுத்து, த.வெ.க.,வினர் கைது நடவடிக்கை குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில், 'புரட்சி வெடிக்கும்' என்ற வாசகங்களுடன், ஆதவ் அர்ஜுனா கருத்துக்களை பதிவிட்டார். இதையடுத்து, வன்முறையை துாண்டியதாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவு: சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்தை, மனுதாரர் 34 நிமிடங்களில் நீக்கி விட்டார். மறு நாள், அவருக்கு எதிரான புகாரில், வழக்குப்பதிவு செய்து, 10 நிமிடங்களில், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது பதிவால், சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படும், பொது அமைதி பாதிக்கும் என, புகார்தாரர் அச்சம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மனு விசாரணைக்கு எடுத்த நிமிடம் வரை, எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. போராட்டங்களை பற்றி ஆதவ் அர்ஜுனா பதிவு கூறுகிறதே தவிர, உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு, வன்முறையையோ, வெறுப்பையோ துாண்டும் வகையில் அவை இல்லை. அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக்கூடும் என, எச்சரிக்கும் வகையில் மட்டுமே இருந்துள்ளது. அது, அரசியல் ரீதியிலான கருத்து. மக்களின் மனநிலையை கூறும் வகையில் மட்டுமே, இந்த பதிவு அமைந்துள்ளது. ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்க, வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில், ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என, புதிய குற்ற விசாரணை முறை சட்டம் தெரிவிக்கிறது. அதனால், இந்த வழக்கு விசாரணை தொடர வேண்டியதில்லை. ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை