உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி தொடர்பாளர்களாக ஐ.ஏ.எஸ்.,கள் நியமனம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

செய்தி தொடர்பாளர்களாக ஐ.ஏ.எஸ்.,கள் நியமனம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை:அரசின் செய்தி தொடர்பாளர்களாக, நான்கு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை, செய்தி ஊடகங்கள் வாயிலாக சரியான நேரத்தில் பொது மக்களுக்கு எடுத்துரைக்கவும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகிய நான்கு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்து, கடந்த மாதம் 14ல் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்யகுமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை; அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நியமனத்துக்கு தடை விதிக்கும் வகையில், எந்த சட்டமும், விதிகளும் இல்லை' என கூறி, 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ