உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து சேர்த்த உதவி பொறியாளர் மீது வழக்கு வீட்டில் சோதனை

சொத்து சேர்த்த உதவி பொறியாளர் மீது வழக்கு வீட்டில் சோதனை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி இன்ஜினியராக இருந்த பிலிப் ஆண்டனி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டில் 7 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முழுமைக்கும் உதவி பொறியாளரான பிலிப் ஆண்டனி 54, கமிஷனர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு பணிகள் செய்தார். இந்த பணிகள் நடந்த காலத்தில் அவர் வண்ணார்பேட்டையில் உள்ள பிரபல நகைக்கடையில் அடுத்தடுத்து நகைகள் வாங்கியது, விலை உயர்ந்த சொகுசு கார்கள் வாங்கியது, சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியது என சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. மாநகராட்சியில் அவருக்கு மிகப்பெரிய அறை ஒதுக்கப்பட்டு அந்த அறையை கான்ட்ராக்டர்கள் தங்களது சொந்த செலவில் அழகு படுத்தி கொடுத்தனர். அடுக்கடுக்கான புகார்களை தொடர்ந்து மே 21ம் தேதி பிலிப் ஆண்டனியை நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்கு மாறுதல் செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டார். பணி மாறுதல் செய்தாலும் அவர் தொடர்ந்து திருநெல்வேலியிலேயே பணியாற்றி வந்தார். ஒரே மாதத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு பணி மாறுதல் பெற்றார். அடுத்து கோவில்பட்டிக்கும் மாறுதல் பெற்றார். இதனிடையே அவர் மீதான ஊழல் புகாரின் படி திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி. மெஸ்கலரின் எஸ்கால் புகாரின் பேரில் பிலிப் ஆண்டனி மற்றும் அவரது மனைவி நசீமா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் 2019 ஜனவரியில் இருந்து 2024 டிசம்பர் வரை 5 ஆண்டுகள் திருநெல்வேலி மாநகராட்சியில் தமது வருமானத்தை விட 85 சதவீதம் அதிகமான சொத்து அதாவது 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிலிப் ஆண்டனியின் மனைவி நசீமா பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார். நேற்று கூடுதல் எஸ்.பி. தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் மற்றும் போலீசார் திருநெல்வேலி ஐசக் நகரில் உள்ள பிலிப் ஆண்டனி வீட்டில் 7 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக பொறியாளராக இருந்த லெனின், அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லெனின் இடம் மாற்றப்பட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், பிலிப் ஆண்டனி மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர் வாங்கி குவித்த சொத்து பட்டியலை விசாரித்து வருகிறோம். அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை