ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், தங்கள் நிறுவனம் குறித்து அவதுாறு கருத்து தெரிவிக்க, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, 'மாதம்பட்டி பாகசாலா' நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இந்த விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்பு படுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.