இயற்கை உர உயிர் ஊக்கி கொள்முதல் டெண்டர் அறிவிப்பை எதிர்த்து வழக்கு
சென்னை:தமிழக அரசின் வேளாண் துறை, 21 கோடி ரூபாயில், 'திரவ இயற்கை உர உயிர் ஊக்கி' கொள்முதல் செய்வதற்காக வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த ஜோதிபாசு தாக்கல் செய்த மனு:விவசாய பயன்பாட்டுக்காக, 'லிக்யூட் ஆர்கானிக்' என்ற, திரவ இயற்கை உர உயிர் ஊக்கியை, 21 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய, வேளாண் இயக்குனர் கடந்த, 18ம் தேதி 'டெண்டர்' அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த உயிர் ஊக்கி கடல் பாசியில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை விவசாயத்துக்கு பயன்படுத்தினால், உற்பத்தி பெருகும் என்று, மத்திய அரசின் உரக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறுகிறது. ஆனால், தமிழக அரசு கொள்முதல் செய்யும், திரவ இயற்கை உர உயிர் ஊக்கி என்பது என்ன? அது எந்த வகையானது என்ற விபரம் டெண்டர் அறிவிப்பில் இல்லை. இது, மத்திய உரக்கட்டுப்பாட்டு ஆணைய உத்தரவுக்கு எதிரானது. ஏனெனில், இதுபோல திரவ இயற்கை உர உயிர் ஊக்கி குறித்து ஆய்வு செய்து, அதை வகைப்படுத்தி, அந்த வகையை அட்டவணையில் சேர்த்து அறிவிக்க வேண்டும் என, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செய்யாமல், தமிழக அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, அந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி, ''திரவ இயற்கை உர உயிர் ஊக்கி குறித்து, மத்திய அரசு ஆய்வுகளை செய்த அட்டவணை 6ல் சேர்க்க வேண்டும். ''அந்த ஆய்வு முறை, எந்த வகையில் இருக்க வேண்டும் என, மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், எந்த அடிப்படையில், அரசு இதை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க முடியும்,'' என்றார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''இந்த திரவ இயற்கை உர உயிர் ஊக்கியை, விவசாயிகளுக்கு அரசு இலவசமாக அளிக்கிறது,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தரப்பு கேள்வி மற்றும் சந்தேகங்கள் நியாயமானதாக தோன்றுகிறது. இதற்கு உரிய விளக்கம் அளிக்காமல், டெண்டரை எப்படி இறுதி செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர். 'இதற்கு அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கிறேன். எனவே, வழக்கை தள்ளிவைக்க வேண்டும். அதுவரை டெண்டரை இறுதி செய்ய மாட்டோம்' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார்.இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை, டிசம்பர், 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.