உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருப்புத்துார் கோர விபத்தில் அலட்சிய டிரைவர் மீது வழக்கு

 திருப்புத்துார் கோர விபத்தில் அலட்சிய டிரைவர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே நேற்று முன்தினம், 11 பேரை பலி வாங்கிய இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். திருப்பூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற அரசு பஸ்சும், எதிர் திசையில் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த அரசு பஸ்சும், நேற்று முன்தினம் மாலை, திருப்புத்துார் கும்மங்குடி சமத்துவபுரம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், திருப்பூர் பஸ் டிரைவர் சென்றாயன், ஒன்பது பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பலியானோரின் உடல்கள், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்களுக்கு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தமிழக அரசு சார்பில் முதல்வர் நிவாரண தொகையாக, தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். காரைக்குடி பஸ்சை ஓட்டிய டிரைவர் சுதாகர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து மோதியதில், இரண்டு பஸ்களிலும் சென்ற 11 பேர் இறந்துவிட்டதாகவும், 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிராவயல் வி.ஏ.ஓ., வினோத்குமார் அளித்த புகாரில், திருப்புத்துார் டி.எஸ்.பி., செல்வக்குமார் விசாரிக்கிறார். சுதாகர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

'ஒப்பந்த டிரைவர்கள் அல்ல'

விபத்தில் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து நலம் விசாரித்தார். பின், அவர் கூறியதாவது: இரு பஸ்களையும் இயக்கியவர்கள் ஒப்பந்த டிரைவர்கள் அல்ல; அனுபவம் பெற்ற அரசு டிரைவர்கள் தான். மூன்று ஆண்டுகளில் நடந்த பெரிய கோர விபத்து இது. இதில் என்ன தவறு நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அனுபவமுள்ள, தகுதியான டிரைவர்கள் தான் அரசு பஸ்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, இன்னும் கூடுதல் பயிற்சிகளை அளிப்போம். இந்த விபத்து அஜாக்கிரதை காரணமாக நடந்துள்ளது. டிரைவர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி