UPDATED : ஆக 19, 2011 07:16 PM | ADDED : ஆக 19, 2011 06:34 PM
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் சி.பி.ஐ.,போலீசார் சோதனை நடத்தினர். அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில் உள்ள தனியார் நூற்பாலையில் நேற்று சென்னையிலிருந்து வந்த சி.பி.ஐ.,போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திரா முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீது அதிகமாக சொத்து சேர்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி அலுவலகங்கள் மற்றும் சென்னையில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடந்தது. இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நூற்பாலை நிர்வாகத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலை உள்ளது. இதில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு பங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான பண பரிவர்த்தனைகள் நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில், சி.பி.ஐ., அதிகாரிகள் அருப்புக்கோட்டையில் உள்ள நூற்பு மில்லில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சி.பி.ஐ., அதிகாரிகள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். கர்நாடகாவிலும் சோதனை: ஜெகனின் சொத்துக்கள் குறித்து கர்நாடகாவிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் ஜெகனின், சொத்துக்கள் மற்றும் வருமானம் குறித்தும் தகவல்களை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.