உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: இ.பி.எஸ்., கேட்கிறார்

சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: இ.பி.எஸ்., கேட்கிறார்

சென்னை: '' சென்னை அண்ணா பல்கலை.,யில் மாணவி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, நீதி வழங்க, அந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்,'' என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கை எப்படி இணையத்தில் வெளியானது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை கூட ஸ்டாலின் மாடல் அரசின் போலீசுக்கு தெரியாதா? ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவனை இத்தனை நாட்கள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு தி.மு.க., அரசின் போலீசே முழு பொறுப்பு! ஞானசேகரன் தி.மு.க., உறுப்பினரே இல்லை என்று அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவர் தி.மு.க.,வின் பகுதி துணை அமைப்பாளர் பொறுப்பில் உள்ளதற்கான தி.மு.க., நோட்டிஸ், அக்கட்சி நாளேடு செய்தி உட்பட பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு போலீஸ் விடுவிக்க முயற்சித்தது? ஆளுங்கட்சியான தி.மு.க.,வில் ஞானசேகரன் பொறுப்பில் இருப்பதை இத்துடன் பொருத்திப் பார்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது.முதல் தகவல் அறிக்கையில், ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார் அந்த நபர்? யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த திமுக அரசு?. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஸ்டாலின் மாடல் அரசின் பொறுப்பு! இனி இந்த வழக்கை தி.மு.க., அரசின் போலீஸ் விசாரிப்பதற்கு தார்மீகத் தகுதியில்லை! எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்! இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை