உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்க கோரிய வழக்கு

போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்க கோரிய வழக்கு

மதுரை : தமிழகத்தில் போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாவட்ட, மாநில அளவில் ஆணையம் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த பொதுநல மனு:

உச்சநீதிமன்றம்,'அனைத்து மாநிலங்களிலும் போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்,' என 2006 ல் உத்தரவிட்டது. அதன்படி டி.எஸ்.பி., பதவி வரையிலான போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் ஆணையம் அமைக்க வேண்டும். எஸ்.பி., மற்றும் அதற்கு மேல் பதவிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அளவில் ஆணையம் இருக்க வேண்டும். மாவட்ட ஆணையம் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில், மாநில ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்பட வேண்டும். போலீஸ் காவலில் மரணம், காயம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான புகார்களை மாநில ஆணையம் விசாரிக்கும். நிலம், வீடு அபகரிப்பு அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை மாவட்ட ஆணையம் விசாரிக்கும். சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக துறை ரீதியான அல்லது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழகத்தில் நிறைவேற்றவில்லை. போலீஸ் காவலில் மரணங்கள் தொடர்கின்றன. திருப்புவனம் போலீசார் தாக்கியதில் கோயில் காவலாளி அஜித்குமார் இறந்தார். ஆணையம் அமைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும். போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநில, மாவட்ட அளவில் ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதிகள் மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்., 23 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
செப் 05, 2025 14:42

ஒரு இலவச எண்ணும் அறிவிக்கப் படவேண்டும் சாமி. ஏனென்றால் ஆண் காவலர்களால் ஆண்கள்தான் தொல்லைக்கு ஆளாகிறார்கள். வெளியில் நிறைய வருவதில்லை. திருவான்மியூர் கடற்கரையில் காவலர் சேகர் & கோ தனியாக இருந்தாலும் கூட்டாக இருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும் நடந்தாலும் நின்னாலும் ஒருமையில் கேவலமாக பேசி குற்ற உணர்ச்சியை கொண்டு வந்து பணம்/ பொருள் பிடுங்குகின்றனர். செக்கிங் என்ற பெயரில் உறுப்புகளை தொட்டு பார்க்கின்றனர். வண்டியில் கூட்டி அறைக்கும் அழைத்து செல்கின்றனர். புது குற்றவாளிகளை உருவாக்குகின்றனர்.


GMM
செப் 03, 2025 07:16

ஆணையம் அவசியம். தலைமை செயலர் மட்டும் பதில் சொல்ல வேண்டும். நீதிபதி, தலைமை செயலர், எதிர் கட்சி தலைவர் மற்றும் கவர்னர் பிரதிநிதி கொண்டு குழு அமைத்து ஆணையம் செயல்பட வேண்டும்.


சிட்டுக்குருவி
செப் 03, 2025 06:47

உச்சநீதிமன்றமே ஆணையிட்டும் ஆணையம் அமைக்கவில்லை யென்றால் கோர்ட் அவமதிப்பு வழக்காக பதிந்திருக்கவேண்டும். இப்போதும் அவமதிப்பு வழக்காக மாற்றி விசாரிக்கவேண்டும். அரசியல் அமைப்பின் படி நீதித்துறை போன்றே காவல்துறையும் தனித்துவமாக செயல்படக்கூடிய அமைப்புதான். ஆனால் தனித்துவமாக செயல்படக்கூடிய நடைமுறையில் உள்ள சிக்கல்களே அதற்க்கு காரணம். அரசியல்வாதிகளுக்கு ஒத்துப் போகாத அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் அநீதியான செயல்களில் இருந்து அதிகாரிகளை காப்பாற்ற வழிமுறைகள் இல்லை. அதனால் சிறிது வலைந்துகொடுத்துபோகலாமே என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும். இன்னொரு முக்கிய காரணம் காவல்துறையில் உச்ச பதவியில் அமரும் அதிகாரிகள் பெரும்பாலும் அடுத்து ஓய்வு பெறுபவர்களாகவே இருப்பார்கள். அதனால் நல்லபடியாக ஓய்வுபெற்று, பென்ஷன் பெறவேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். அதனால்தான் காவல்துறையில் மக்களுக்கு குறைபாடுகள் ஏற்படுகின்றது. அதை சரிசெய்ய வேண்டுமானால் காவல்துறை தனித்துவமாக செயல்படும் முறைகளை ஆராய்ந்து அதற்கான அமைப்புகளை உருவாக்க வேண்டும் .


Kasimani Baskaran
செப் 03, 2025 04:06

எஜமானை விட்டுவிட்டு அவனுக்கு வாலாட்டும் இவர்களை பழிவாங்குவது சுத்த பயித்தியக்காரத்தனம்.


Nagercoil Suresh
செப் 03, 2025 02:09

வேலியே பயிரை மேய்ந்தால் விசாரணை நேரத்தை குறைத்து தண்டனையை அதிகரிக்க வேண்டும்...காவலர்கள் ஏன் தொப்பி அணிகிறார்கள்? தொப்பி வைத்திருப்பதால் திருடனை விரட்டி பிடிப்பதில் இடையூறாக இருப்பதாக தெரிகிறது. அடிமையாக இருந்த போது ஆங்கிலேயர்கள் தாங்களை மேன்மையாக காட்டுவதற்கு பயன்பட்டிருக்கலாம் அதையே தொடர்வதில் என்ன பயன் உள்ளதோ தெரியவில்லை.... பனிக்கரடிகளுக்கும் நாட்டு கரடிகளுக்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளது என்பது முன்னோர்கள் கருத்து ...


புதிய வீடியோ