மின் தடையால் நீட் தேர்வில் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
சென்னை:'மின் தடையால், நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளான, எம்.பி.பி.எஸ்.,- - பி.டி.எஸ்., உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது. தமிழகத்தில் தேர்வு நாளன்று, சென்னையில் காற்றுடன் பெய்த பலத்த மழையால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆவடியில் உள்ள பி.எம்.கேந்திரிய வித்யாலயா பள்ளி, குன்றத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி மையத்தில் எழுதிய மாணவர்களில், 16 பேர், மின்தடையால் தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்றும், மறுதேர்வு கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனுக்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது; அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, இடைக்கால தடை விதித்தது.இந்த வழக்கு, நீதிபதி சி.குமரப்பன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ''மின்சாரம் தடை ஏற்பட்டது குறித்து, விசாரணை நடத்தப்பட்டது. ''அதில், மின்தடையால் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். எனவே மறுதேர்வு நடத்த முடியாது,'' என்றார்.மாணவர்கள் தரப்பில், தேர்வு மையத்தில் போதிய வெளிச்சம் இருந்ததற்கான, 'சிசிடிவி கேமரா' பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இவ்வழக்கின் உத்தரவை, வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.