உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகத்தில், நெல்லின் ஈரப்பதம் குறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். நடப்பு நெல் கொள்முதல் சீசன், கடந்த செப்., 1ல் துவங்கியது. இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தஞ்சை, திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில், குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால், மழையில் நெல் நனைந்ததால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, தமிழக அரசு சில தினங்களுக்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மூன்று குழுக்களை மத்திய அரசு நியமித்தது. முதல் குழுவில் துணை இயக்குநர் ஆர்.கே.ஷாஹி, தொழில்நுட்ப அதிகாரிகள் ராகுல் சர்மா, தனுஜ் சர்மா இடம் பெற்றனர். இரண்டாவது குழுவில் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அதிகாரிகள் ஷோபித் சிவாச், ராகேஷ் பாரலாவும்; மூன்றாவது குழுவில் உதவி இயக்குநர் பிரீத்தி, தொழில்நுட்ப அதிகாரிகள் பிரியா பட், அனுபமா ஆகியோரும் இருந்தனர். ஒரு குழுவினர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கலெக்டர் சினேகா, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம், ஒரகடம் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டனர். இக்குழுவினர், திறந்தவெளியில் குவிக்கப்பட்டிருந்த நெல் குவியலை அள்ளி, ஈரத்தன்மையை அறிந்தனர்; கருவியில் நெல்லை வைத்து ஈரப்பத சதவீதத்தை அளவிட்டனர். ஆய்வகத்தில் சோதனை செய்ய, சிறிய பாக்கெட்டிலும் நெல்லை எடுத்து சென்றனர். பின், மதுராந்தகம் அருகே படாளம், லட்சுமி நாராயணபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், மத்திய உணவு துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த திடீர் உத்தரவை அடுத்து, நெல்லின் ஈரப்பத ஆய்வை ஒத்தி வைத்து, நாமக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்தனர். மூன்று குழுக்களும், நாளை வரை பல மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி