ஒரே குடும்பத்தினருக்கு வாரியத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி
தமிழ்நாடு துாய்மைப் பணியாளர் நல வாரியத்தில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது, துாய்மைப் பணியாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் துாய்மைப் பணியில் ஈடுபடுவோரின், கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக, அரசு திட்டங்களை செயல்படுத்த, துாய்மைப் பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, 2023ம் ஆண்டு மே 3ம் தேதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி நியமிக்கப்பட்டார். துணைத் தலைவராக கோவையை சேர்ந்த கனிமொழி நியமிக்கப்பட்டார்.வாரிய பதவிகளில் நியமிக்கப்படுவோரின் பதவி காலம், இரண்டு ஆண்டுகள். கயல்விழி தற்போது மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ளார். அவர் துாய்மைப் பணியாளர் நல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததால், தற்போது புதிய தலைவராக, கோவை மாவட்டம், திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே, வாரியத்தின் துணைத் தலைவராக உள்ள கனிமொழியின் பெரியப்பா. ஒரே மாவட்டம், ஒரே தாலுகாவில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது, துாய்மைப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர் வாரியத்தில் உள்ள உறுப்பினர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, வாரிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி வழங்கி இருப்பது, தி.மு.க.,விலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.- நமது நிருபர் -