தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: 'தென் மாவட்டங்களில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு, அரியலுார் மாவட்டம் ஜெயங் கொண்டம் பகுதியில், தலா 8 செ.மீ., மழை பெய்தது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, மாவட்டங்களில், சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ., 10, 11 ஆகிய தேதிகளில், தென்தமிழகத்தில் சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.