மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில், பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், சீருடை பணியாளர்களுக்கான தேர்வுகளை, மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இதில் தற்போதுள்ள வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப, பழைய நடைமுறைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்வாணைய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே விண்ணப்பிப்பது, விண்ணப்பிப்போருக்கு பதில் அளிப்பது உள்ளிட்டவற்றுக்கு, தபால்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருந்தது. அதனால், பல்வேறு சிரமங்களும், காலதாமதமும் ஏற்பட்டது. தற்போது, மின்னஞ்சல், மொபைல் போன் உள்ளிட்ட தொடர்பு சாதனங்களின் வசதி பெருகி விட்டது. அதனால், தேர்வு நடைமுறைகள் மாறுகின்றன. அதாவது, ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஆள்சேர்ப்பு நடந்தது. அந்த கால அளவு, இனிமேல் ஆறில் இருந்து 10 மாதங்களாக குறைக்கப்படுகிறது. தேர்வு அறிவிப்பில் இருந்து விண்ணப்பிக்கும் காலம் வரையிலான இடைவெளியை, 45ல் இருந்து, 21 நாட்களாக குறைக்க உள்ளோம். பேனா, காகித வடிவிலான தேர்வுகளை, அடித்தல், திருத்தல் இல்லாத, திருத்துவதற்கு எளிதான மற்றும் துல்லியமான மதிப்பீடுக்காக, கணினி அடிப்படையிலான தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. மேலும், தேர்வு நிலைகளின் அடுக்குகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. மேலும், ஒருங்கிணைந்த ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் தேர்வு தவிர, அனைத்து தேர்வுகளுக்கும் விளக்க வகை வினாக்கள் நீக்கம்; அனைத்துக்கும் நேர்காணல் தேர்வு என்பது குறைக்கப்படும்; ஆவண சரிபார்ப்பு பணி, சம்பந்தப்பட்ட துறைகளிடமே ஒப்படைக்கப்படும்; தேர்வர்களின் பதிவுகளை வெளிப்படையாக பாதுகாக்க, மின் ஆவண அமைப்பு ஏற்படுத்தப்படும் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -