உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில் தரிசன கட்டணங்களை மக்களிடம் கேட்காமல் மாற்றுவதா? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

 கோவில் தரிசன கட்டணங்களை மக்களிடம் கேட்காமல் மாற்றுவதா? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை: கோவில்களில் தரிசனம் மற்றும் அதற்குரிய கட்டண மாற்றம் குறித்து கருத்து கேட்பு அறிவிப்பு செய்யும்போது, அனைத்து பக்தர்களுக்கும் சென்றடையும் வகையில் வழிகாட்டுதல்களை வெளியிட தாக்கலான வழக்கில், அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருசெந்துார் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இடைநிறுத்த சிறப்பு தரிசனம் - பிரேக் தரிசனம் மற்றும் ஏற்கனவே அமலில் உள்ள தரிசன கட்டணத்தை உயர்த்தும் போது பக்தர்களிடம் கருத்து கோர, கோவில் அமைந்துள்ள மாவட்டத்தில் மட்டும் அறிவிப்பு செய்யப்படுகிறது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்லாத இடங்களில் கட்டண உயர்வு குறித்து அறிப்பு இடம் பெறுகிறது. இதனால் புதுவகை தரிசனம் மற்றும் கட்டண உயர்வு குறித்து பக்தர்களுக்கு தெரிவதில்லை. கோவில் நிர்வாகம், 'ஆட்சேபனை எதுவும் வரவில்லை' என அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைத்து, கட்டண உயர்வு மற்றும் புது நடைமுறைக்கு அனுமதி பெறுகிறது. கட்டணம் மற்றும் தரிசனமுறையில் மாற்றம் நடைமுறைக்கு வரும்போது தான் பக்தர்களுக்கு விபரம் தெரிகிறது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட சில முக்கிய கோயில்களில் ஒரு மணிநேரம் இடைநிறுத்த தரிசனம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கருத்து கேட்பு அறிவிப்பு செய்யும்போது அனைத்து பக்தர்களுக்கும் சென்றடையும் வகையில் அறநிலையத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். கருத்து கேட்பு அறிவிப்பை அறநிலையத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாநிலம் முழுதும் நாளிதழ்களில் அறிவிப்பு செய்ய வேண்டும். கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். சிறப்பு தரிசனம், பூஜைகள், இடைநிறுத்த சிறப்பு தரிசனத்திற்கு கட்டண நிர்ணயம் மற்றும் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து அறநிலையத்துறை அறிவிப்பு செய்ய இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜன.,6க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை