சென்னை : 'ஆன்லைனில் சேவை வழங்குவது தொடர்பாக, விளம்பரங்கள் வெளியிடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது' என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.'பிளம்பர், கார்பென்டர் உள்ளிட்ட பல்வேறு அன்றாட தேவைகளை, பொது மக்களுக்கு சுலேகா, குயிக்கர், ஜஸ்ட் டயல் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள், வழக்கறிஞர் சேவையையும் வழங்கி வருகின்றன. இந்நிறுவன செயலிகள், இணையதளங்களில், வணிக நோக்குடன் சட்ட சேவை வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைக்கு தடை விதித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பி.என்.விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'இந்திய பார் கவுன்சில் விதிகள்படி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வழக்கறிஞர்கள் தங்களை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆன்லைனில் சேவை வழங்குவது தொடர்பாக, விளம்பரங்கள் வெளியிடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும், நான்கு வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்' என, இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக, இந்திய பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இணையதள நிறுவனங்கள் தரப்பில், விளம்பரங்கள் நீக்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதா என, சம்பந்தப்பட்ட இணையதளங்கள், செயலிகளை சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி, இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்., 4க்கு தள்ளிவைத்தனர்.