உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலையேற்ற பயணங்களால் ரூ.63.43 லட்சம் வருவாய் முதல்வர் ஸ்டாலின் தகவல்

மலையேற்ற பயணங்களால் ரூ.63.43 லட்சம் வருவாய் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை:தமிழகத்தில் மலையேற்ற பயணங்களுக்கு, 'ஆன்லைன்' வழி முன்பதிவு திட்டம் வாயிலாக, நான்கு மாதங்களில், 63.43 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட, 40 இடங்களில் மலையேற்றம் செல்லும் திட்டம், கடந்த ஆண்டு அக்டோபர், 24ல் துவக்கப்பட்டது. இதன்படி, www.trektamilnadu.comஎன்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். தமிழகத்தில், 14 மாவட்டங்களில் உள்ள, 40 இடங்களுக்கு பொதுமக்கள், வன உயிரின ஆர்வலர்கள், இத்திட்டம் வாயிலாக சென்று வருகின்றனர். வனத்துறை வழிகாட்டுதலுடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 'ஆன்லைன்' முறையில் முன்பதிவு செய்யும் திட்டம் வாயிலாக, நான்கு மாதங்களில், 4,792 பேர் மலையேற்றப் பயணங்கள் சென்று வந்துள்ளனர். இதன் வாயிலாக, 63.43 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில், 49.51 லட்சம் ரூபாய் நேரடியாக, அந்தந்த பகுதி பழங்குடியின இளைஞர்களுக்கு சென்றுள்ளது. இவர்கள்தான் வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர். வனத்தின் இயற்கை அழகை மிக அருகில் சென்று ரசிப்பதற்கு, இத்திட்டம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. காட்டுத்தீ உள்ளிட்ட காரணங்களால், தற்போது நிறுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஏப்., 16ல் மீண்டும் துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !