உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்துவிடும் கலைமாமணி விருது விழாவில் முதல்வர் பேச்சு

மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்துவிடும் கலைமாமணி விருது விழாவில் முதல்வர் பேச்சு

சென்னை: ''மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்துவிடும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த, தமிழக அரசின், 'கலைமாமணி' விருதுகள் வழங்கும் விழாவில், விருதுகளை வழங்கி, ஸ்டாலின் பேசியதாவது: கடந்த, 1967ல், அண்ணாதுரை கையால் கருணாநிதி பெற்ற, 'கலைமாமணி' விருதை, இன்று பலர் பெற்றிருக்கின்றனர். கலைத்துறையின் எந்தப்பிரிவும் விடுபட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் விருதுகளை வழங்கும், இயல், இசை, நாடக மன்றத்திற்கு பாராட்டுகள். மதிப்பு அதிகம் விருது பெற்ற பெரும்பாலானோர் எனக்கு தெரிந்தவர்கள் தான். மிகச்சரியான நபர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 90 வயதான முத்துகண்ணம்மாளும், இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகின்றனர். கலைமாமணி விருதுடன் தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில், தினமும் இரண்டுமுறை ஏறி வருகிறது. தங்கத்தை விட, கலைமாமணி என்ற புகழ் சேர்க்கும் பட்டத்திற்கு மதிப்பு அதிகம். ஏனெனில், இது தமிழகம் தரும் பட்டம். தொன்மையான கலைகளை வளர்த்தல், கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்துவரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நம் பாரம்பரிய கலைகளை வெளிமாநிலங்களுக்கும், உலக அளவிலும் எடுத்துச் செல்லுதல், நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்குதல் போன்ற பணிகளை, தமிழக இயல், இசை, நாடக மன்றம் மிகச்சிறப்பாகச் செய்து வருகிறது. அதன் அடையாளம் இந்த விழா. நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை, 3,000 ரூபாயாக அதிகரிப்பு; தமிழக இயல், இசை, நாடக மன்றத்திற்கான ஆண்டு நிதி உதவி, 3 கோடியிலிருந்து, 4 கோடி ரூபாயாக அதிகரிப்பு; நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைப்பொருட்கள் வாங்க, 500 பேருக்கு ஆண்டுக்கு தலா, 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. நலிந்த நிலையில் உள்ள, கலைமாமணி விருது பெற்றவர்களுக்கான நிதி உதவி, 1 லட்சம் ரூபாயாக உயர்வு; பொங்கல் கலை விழா நடத்த, 2 கோடி ரூபாய்; கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம்; புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களின் குடும்பத்தினருக்கு, 25,000 ரூபாய்; தமிழில் கலை நுால்கள் வெளியிட தலா 2 லட்சம் ரூபாய் என பல்வேறு பணிகளை, தி.மு.க., அரசு செய்து வருகிறது. அடையாளம் அழியும் தி.மு.க., அரசு, கலைஞர்களையும், முத்தமிழையும் போற்றும் அரசாகவே எப்போதும் இருக்கும். முத்தமிழையும் வளர்த்தது திராவிட இயக்கம். நாடகங்கள் வாயிலாகவே திராவிட இயக்க கருத்துகள் மக்களிடம் சென்று சேர்ந்தன. மொழி சிதைந்தால் இனமும், பண்பாடும் சிதைந்துவிடும்; நம் அடையாளம் அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியையும், சுயமரியாதையையும் இழந்து வாழ்வதில் என்ன பயன்? எனவே, கலைகளை, மொழியை, இலக்கியத்தை, இனத்தை, அடையாளத்தை காப்போம். தமிழ் கலைஞர்கள் உலகம் முழுக்கச் சென்று, கலைகளை வளர்க்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு விருது தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வாயிலாக, பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு, 'கலைமாமணி' விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், அகில இந்திய விருதுகள், சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவினருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில், அகில இந்திய விருதுகள் பிரிவில், பாரதியார் விருதை முருகேச பாண்டியன், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை கே.ஜே.ஜேசுதாஸ், பாலசரசுவதி விருதை முத்துகண்ணம்மாள் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும், மூன்று சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டன. சிறந்த கலை நிறுவனத்திற்கான விருது, சென்னையைச் சேர்ந்த தமிழ் இசைச் சங்கத்திற்கும், சிறந்த நாடகக் குழு விருது, மதுரையைச் சேர்ந்த, எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு விருது மற்றும் தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல, கலைமாமணி விருது பிரிவில், மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து, இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள், இதர கலைப்பிரிவுகள் ஆகியவற்றில் மொத்தம் 90 விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை, திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, பாடலாசிரியர் விவேகா, இசையமைப் பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் பெற்றனர். நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரி யத் தலைவர் வாகை சந்திரசேகர் வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ