உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5.24 கோடி மோசடி வழக்கு சினிமா தயாரிப்பாளருக்கு சம்மன்

ரூ.5.24 கோடி மோசடி வழக்கு சினிமா தயாரிப்பாளருக்கு சம்மன்

சென்னை:பண மோசடி வழக்கில், சினிமா பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்ய சென்னை வந்த மும்பை போலீசார், அவருக்கு உடல் நலம் சரியில்லாததால், விசாரணைக்கு ஆஜராகுமாறு, 'சம்மன்' வழங்கினர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அஜய் ஜெகதீஷ் கபூர்; தொழில் அதிபர். இவரிடம் கேரளாவைச் சேர்ந்த ரோகன், பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி, 5.24 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து உள்ளார்.இதுகுறித்து, மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கேரளாவில் பதுங்கி இருந்த ரோகனை கைது செய்தனர். விசாரணையில், பண மோசடியில், சினிமா பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு, தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர், சென்னை அசோக் நகர், 19வது அவென்யூவில் வசித்து வருகிறார். 'லிப்ரா புரொடக் ஷன்' என்ற சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான, 'டிராகன்' என்ற படத்திலும் நடித்துள்ளார்.இவரை கைது செய்ய, மும்பை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். கடுமையான உடல்நல பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக கூறிய ரவீந்தர், டாக்டரை வீட்டிற்கு வரவழைத்து, மருத்துவ சான்றிதழையும் வழங்கி உள்ளார். இதனால், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, மும்பை போலீசார், 'சம்மன்' வழங்கிச் சென்றனர். மேலும், ரவீந்தர் சந்திரசேகர் கூட்டாளிகளான, கிண்டியைச் சேர்ந்த மணிகண்டன், கொளத்துாரைச் சேர்ந்த பாண்டி ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.ஏற்கனவே ரவீந்தர் சந்திரசேகர், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி என்பவரிடம், 16 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை