உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் காங்., நிர்வாகிகளுக்குள் மோதல்; தடித்த வார்த்தைகளால் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

கோவையில் காங்., நிர்வாகிகளுக்குள் மோதல்; தடித்த வார்த்தைகளால் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

கோவை : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபாலை வழியனுப்ப, கோவை விமான நிலையத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்குள் தடித்த வார்த்தைகளால் வாக்குவாதம் ஏற்பட்டதால், பதற்றம் நிலவியது. இரு கோஷ்டியினரையும் கட்சியினர் விலக்கி விட்டனர்.கேரள மாநிலம் பாலக்காடு சென்றிருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் வேணுகோபால், மும்பை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையம் வந்தார். அவரை வழியனுப்ப, கோவையைச் சேர்ந்த காங்., நிர்வாகிகள் வந்திருந்தனர்.

குற்றச்சாட்டு

கோவையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், ஒருவர் நடத்தும் கூட்டத்துக்கு மற்றவர்கள் செல்வதில்லை. இச்சூழலில், வேணுகோபாலை சந்தித்தபோது, ஒருவரை பற்றி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.அவரை வழியனுப்பி விட்டு வெளியே வந்தபோது, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க மாநில பொதுச்செயலரான செல்வத்தை, தேசிய செயலரான மயூரா ஜெயகுமார் இடித்து தள்ளியுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தரம் தாழ்ந்த வார்த்தைகளை ஜெயகுமார் உபயோகித்ததால், பதற்றமான சூழல் உருவானது. இருதரப்பிலும் ஆதரவாளர்கள் திரண்டதால், மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. கைகலப்பு ஏற்பட்டு விடாதபடி, இரு தரப்பினரையும் கட்சி நிர்வாகிகள் விலக்கி விட்டனர்.கார் அருகே சென்ற ஜெயகுமார், ஆக்ரோஷத்துடன் திரும்பி வந்து, ''அடி வாங்கியே வளர்ந்தவன் நான்'' என்றவாறு, தகாத வார்த்தைகளை உச்சரித்தார்.உடனே, “என்னிடம் அடி வாங்கி விட்டு வந்தவன் தான்... நீ...” என்றார் செல்வம்.கோபமடைந்த ஜெயகுமார், மீண்டும் மோசமான வார்த்தைகளை பேசியதோடு, செல்வத்தை தாக்குவதற்கு பாய்ந்தார். கட்சியினரும், விமான நிலைய பாதுகாப்பு படையினரும் அவரை தடுத்தனர்.அப்போது, ''என்றைக்கும் இதே மாதிரி இருக்க மாட்டேன்...'' என செல்வம் கூறியதற்கு, ''உன்னை ஒரு நாள் போடாம விட மாட்டேன்...'' என்ற ஜெயகுமார், மீண்டும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டினார்.இப்பிரச்னை தொடர்பாக, செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர்.

தீர்மானம்

இச்சம்பவம் தொடர்பாக, மாநில செயலர் செல்வராஜ் கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியில் மயூரா ஜெயகுமார் பிரச்னை செய்து வருகிறார். கிட்டத்தட்ட 80 - 90 சதவீத கட்சியினர் அவரிடம் இருந்து ஒதுங்கி உள்ளனர். கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார் என்பது தொடர்பாக, கடந்த மாதம் காங்., நிர்வாகிகள் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி, டில்லி தலைமைக்கு அனுப்பினோம்.மும்பை செல்வதற்காக கோவை வந்திருந்த அகில இந்திய பொதுச்செயலர் வேணுகோபாலிடம், கோவை காங்கிரஸ் கமிட்டியில் உள்ள பிரச்னையை விளக்கினோம். அதற்கு, ''தமிழகத்துக்கான கட்சி மேலிடப் பொறுப்பாளர் அஜய்குமாரிடம் சொல்லுங்கள்; அவர் நடவடிக்கை எடுப்பார்,'' என, வேணுகோபால் கூறினார்.அதன்பின் தான், விமான நிலையத்தில் மயூரா ஜெயகுமார், செல்வத்தை தாக்குவது போல வந்து தடித்த வார்த்தைகளால் பேசினார். ''தன்னிடம் துப்பாக்கி இருக்கிறது; உங்களை அழித்து விடுவேன்,'' எனவும் சொல்லி மிரட்டினார். அவரால் கட்சியினருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால், துப்பாக்கி லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம். இது தொடர்பாக, கட்சி தலைமையிடமும் புகார் கொடுத்து, ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

'வம்புக்கு இழுத்தனர்'

இது தொடர்பாக மயூரா ஜெயகுமாரிடம் கேட்ட போது, “விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, வேண்டுமென்றே என்னை தட்டி விட்டு வம்புக்கு இழுத்தனர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது; அவ்வளவு தான்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

adalarasan
நவ 19, 2024 22:12

சாத்தியமூர்த்தி பவனில், நடக்காத அடிதடியா?சஹஜம்ப்பா ?


sankaranarayanan
நவ 19, 2024 07:42

தமிழகத்தில் காங்கிரசு இந்திரா காங்கிரசு அடிதடி காங்கிரசாகா மாறிவிடத்தே இனி இவர்களுடைய சின்னம் அடிதடி சின்னமாக இருக்குமோ


முக்கிய வீடியோ