கவர்னர் ரவியுடன் முதல்வர் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவியை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி, தமிழக கவர்னராக, கடந்த 2021 செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். பல்கலை துணை வேந்தர்கள் நியமனம், சட்டசபையில் உரை என பல விஷயங்களில், கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இந்த சூழலில், மேற்கு வங்க கவர்னர் அனந்தபோஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் ரவி, அந்த மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கேரள கவர்னர் ராஜேந் திர அர்லேகர், தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்றார். கவர்னர் ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் உடன் இருந்தார்.