உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஐந்து வேளாண் பட்ஜெட்கள் வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.1.94 லட்சம் கோடி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

 ஐந்து வேளாண் பட்ஜெட்கள் வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.1.94 லட்சம் கோடி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருவண்ணாமலை: டிச. 28-: “ஐந்து வேளாண் பட்ஜெட் வாயிலாக விவசாயிகளுக்கு, 1.94 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகளுடன் இருக்கும்போது, சிந்தனைகளும், செயல்களும் பசுமையாகின்றன. விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில், தி.மு.க., அரசு முன்னோடியாக இருக்கிறது. நடப்பாண்டில் மட்டும், மூன்றாவது வேளாண் கண்காட்சியை நடத்தியிருக்கிறோம். இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. பல மணி நேர வேலைகளை சில மணித்துளிகளிலும்; பல நுாறு நபர்கள் செய்யும் வேலைகளை சில இயந்திரங்களை வைத்து செய்யும் அளவிற்கு அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டது. மறுமலர்ச்சி இந்த வளர்ச்சி, விவசாயிகளின் கைகளில் வந்து சேர்ந்தால்தான், அது உண்மையான வளர்ச்சியாக மாறும். இதுபோன்ற தொழில்நுட்பங்களை விவசாயிகள் தேடி அலையக் கூடாது என்பதற்காகவே, அவர்களை தேடி வேளாண் கண்காட்சிகளை, அரசு நடத்திக் கொண்டு இருக்கிறது. கண்காட்சி மட்டும் நடத்திவிட்டால் போதுமா; இதையெல்லாம் விவசாயிகளுக்கு எளிமையாக புரிவது போன்று விளக்கி சொல்வதற்காக, வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுக்கான கலந்துரையாடல்களையும் ஏற்பாடு செய்து தருகிறோம். வேளாண் துறையும், விவசாயிகளும் சந்தித்து கொண்டிருக்கிற பிரச்னைகளை களைந்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். சிலர் பெயரை இஷ்டத்துக்கு மாற்றுவர். ஆனால், விவசாயிகளை தவிக்க விட்டு நடுத்தெருவில் போராட விடுவர். இன்னும் சிலர் விவசாயி வேடமிட்டு, அரசியல் செய்வர். ஆனால், விவசாயிகளை பாதிக்கிற சட்டங்களை ஆதரிப்பர். விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவர். நிதி ஒதுக்கீடு ஆனால், தி.மு.க., அரசுக்கு விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும்தான் முக்கியம். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வேளாண்மை துறை என இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என நினைத்தோம். அதற்காக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தோம். இதுவரை, ஐந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து விட்டோம். இந்த பட்ஜெட்கள் வாயிலாக விவசாயிகளுக்கு, 1.94 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஐந்தாவது பட்ஜெட்டில் மட்டும், 45,661 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். கடந்த 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிட்டால், நிதி ஒதுக்கீடு, 33 சதவீதம் அதிகம். விளைச்சலில் மட்டுமல்ல, விவசாயிகளின் துன்பத்திலும் துணையாக நிற்பவர்கள் நாங்கள்தான். ஐந்து ஆண்டுகளில் இதுவரைக்கும், 32.8 லட்சம் ஏக்கரில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு, 20.84 லட்சம் விவசாயிகளுக்கு, 1,631 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் நலனை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு என்றைக்கும் துணையாக நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம், மகேஷ், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ