சென்னை:சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க.,வை தாங்கிப் பிடிக்கும் துாணாக எத்தனையோ அணிகள் இருந்தாலும், அதில் தனித்துவமானது சட்டத் துறை.இது, தி.மு.க.,வை காக்கும் அணி. எம்.ஜி.ஆர்., ஆட்சியில், கருணாநிதி மீது பல்வேறு வழக்குகளை போட்டனர். அப்போது, கருணாநிதிக்கு வாதாட வழக்கறிஞர் படையே வரும். பொய் வழக்குகள்
எதிர்க்கட்சியாக இருக்கும்போது, மக்களுக்காக போராட்டம் நடத்தி, ஏராளமான வழக்குகளை சந்தித்துள்ளோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட ஏராளமான பொய் வழக்குளை எதிர்கொண்டுள்ளோம். அப்போதெல்லாம் துணையாக நின்றது சட்டத் துறை.நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் போன்றவர்கள் இங்கிருந்து தான் உருவாகினர். மேலும் பலர் உருவாக வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு மூத்தவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.'ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு' என, ஒற்றை பண்பாட்டை நோக்கி, நாட்டை நகர்த்த நினைக்கும் பா.ஜ., அரசு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாக மாநிலங்களை அழிக்க நினைக்கின்றனர்.இன்று நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்ற நிலையை கொண்டு வந்து விடுவர்.இது ஒற்றை ஆட்சிக்கு தான் வழிவகுக்கும். இது தனி ஒருவருக்கு தான் அதிகாரத்தை கொண்டு சேர்க்கும். இது பா.ஜ.,வுக்கும் நல்லதல்ல. பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஆக்கவே தான் இந்த சட்டம் பயன்படும்.பா.ஜ., மற்றும் அதற்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகள் விரிக்கும் வலையில், அதன் கூட்டணி கட்சிகள் விழுந்து விடக்கூடாது.பா.ஜ., ஆட்சியை ஆதரியுங்கள்; அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இந்தியாவின் கூட்டாட்சி கருத்தியலுக்கு முரணான சட்டங்களை, மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கக்கூடாது. வெல்ல முடியாது
கூட்டாட்சியை பாதுகாக்க, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை இறுதி வரை எதிர்க்க வேண்டும்.பா.ஜ.,வின் செயல் திட்டங்களை ஏற்காதவர்களுக்கு எதிரான கருத்துக்களை, சமூகத்தில் விதைக்கப் பார்க்கின்றனர். அதற்கு துணையாக சிலரை பேச வைக்கின்றனர்; பொய் செய்திகளை பரப்புகின்றனர்.இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சியையும் காக்க, போராடி வருகிறோம். நம்மை அரசியலைமப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள் போல சித்தரிக்கும் முயற்சியில், கவர்னர் ரவி இறங்கியுள்ளார்.நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக, அவரை மாற்றி விட வேண்டாம். அவர் பேச பேசத்தான் தமிழகத்தில் பா.ஜ., அம்பலப்படுகிறது; திராவிட கொள்கைகள் மக்களிடம் சேர்கின்றன.இந்த மாநாட்டில் திராவிடவியல் இயக்கம் குறித்து பேச துாண்டுகோலாக இருந்தவரும் கவர்னர் ரவி தான். இன்றைய எதிரிகள், கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. கருத்தியல் ரீதியாக பேசி, நம்மை அவர்களால் வெல்ல முடியாது.இவ்வாறு அவர்பேசினார்.