உடன்குடி மின் நிலையத்துக்கு துாத்துக்குடியில் இருந்து நிலக்கரி
சென்னை : துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல்மின் நிலையத்திற்கு, ஏற்கனவே உள்ள துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வர, மின் வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது. துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய உடன்குடி அனல் மின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்துள்ளது; திட்டச்செலவு, 13,076 கோடி ரூபாய். இந்த மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வர, கடலில் நிலக்கரி முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகில், கடந்த 11ம் தேதி சோதனை மின் உற்பத்தி துவங்கியது. இதற்கு, 'ஹெவி பர்னஸ் ஆயில்' பயன்படுத்தப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்பட்டது. நிலக்கரி முனையம் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால், கப்பலில் நிலக்கரி எடுத்து வரும் பணி துவங்கப்படவில்லை. உடன்குடி மின் நிலையத்தில் நிலக்கரி பயன்படுத்தி, மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ஏற்கனவே உள்ள துாத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி, உடன்குடி மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம், டெண்டர் கோரியுள்ளது.