சென்னை:லண்டனில் கொல்லப்பட்ட கோவை வாலிபரின் உடலையும், அங்கு தங்கி உள்ள அவரது மனைவியையும் தமிழகம் அழைத்து வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கோவையைச் சேர்ந்தவர்விக்னேஷ், 36. இவருக்கும், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும், 2017ல், திருமணம் நடந்தது. விக்னேஷ், 14 ஆண்டுகளாக, கத்தார் நாட்டில், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்தார். ஓராண்டுக்கு முன் இவருக்கு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில், தமிழர் ஒருவர் நடத்தி வரும் ஹோட்டலில் வேலை கிடைத்தது. மனைவியுடன், 'ஒர்க்கிங் விசா'வில் லண்டன் சென்றார்.பிப்.,14ல், அந்த ஹோட்டல் வேலையை விட்டு நின்றுவிட்டார். சில தினங்களில், லண்டனில் ஹையாத் நட்சத்திர ஹோட்டலில் வேலைக்கு சேர இருந்தார். வேலையை விட்டு நின்ற நாளில், ஹோட்டலில் இருந்து, இரவில், சைக்கிளில் வீடு திரும்பினார். ஆடிங்டன் சாலையில் சென்றபோது மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியுள்ளது. படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை அருகில் உள்ள, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.தேம்ஸ் பள்ளத்தாக்கு போலீசார் விபத்து என, வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தொடர் விசாரணையில் விபத்து அல்ல; கொலை என, தெரியவந்தது. பாக்., நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட, 20 -48 வயதுடைய எட்டு பேரை கைது செய்துள்ளனர். விக்னேஷ் உடல் லண்டனில் உள்ளது. அங்கு இவரது மனைவி மட்டுமே உள்ளார். கணவனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கிறார்.இதுகுறித்து, விக்னேஷ் குடும்பத்தார் கூறுகையில்,'இங்கிலாந்து நாட்டு சட்டப்படி, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின், விக்னேஷின் உடல் லண்டனில் வைக்கப்பட்டுள்ளது.இவரது உடலையும், லண்டனில் சிக்கித் தவிக்கும் ரம்யாவையும் சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.