உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உத்தரவை அலட்சியப்படுத்திய கோவை அதிகாரிகள் சிறை தண்டனை, அபராதம் விதித்து ஐகோர்ட் அதிரடி

உத்தரவை அலட்சியப்படுத்திய கோவை அதிகாரிகள் சிறை தண்டனை, அபராதம் விதித்து ஐகோர்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில், கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் பி.கே.கோவிந்தன் ஆகியோருக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல், கோவை ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் ஏ.சத்யன், வெள்ளலுார் வி.ஏ.ஓ., விஜயகுமார் மற்றும் திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன் ஆகியோருக்கு, தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

அவமதிப்பு வழக்கு

கோவை மாவட்டம், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த ஜான் சாண்டி, 74, என்பவருக்கு சொந்தமாக, சின்னவேடம்பட்டி கிராமத்தில் நிலம் உள்ளது. அதற்கான பட்டாவில், சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட இருவர் பெயரை நீக்க வேண்டும் என, அவர் மனு அளித்தார். அதுதொடர்பான வழக்கில், இரண்டு மாதங்களில் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு, 2023 நவம்பர், 8ல், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை குறித்த காலத்தில் அமல்படுத்தவில்லை என, கோவை மாவட்ட முன்னாள் கலெக்டரும், தற்போதைய தமிழக திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனருமான கிராந்திகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி எம்.ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் பி.கே.கோவிந்தன், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., யமுனா ஆகியோருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் ஜான் சாண்டி, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன்பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் அளித்த கோரிக்கை மனு மீது உரிய விசாரணை நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, குறித்த காலத்தில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவில்லை.உத்தரவை நிறைவேற்றுவதில் அக்கறையின்மை, அலட்சியத்தை அதிகாரிகள் காட்டியுள்ளனர். இத்தகைய செயல், அவமதிப்பு மனு தாக்கல் செய்ய வைத்துள்ளது. எனவே, கோவை மாவட்ட முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கோட்டாட்சியர் பி.கே.கோவிந்தன், கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேல் ஆகியோர் மட்டும், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளனர்.இவர்களில் கோவை வடக்கு தாலுகா தாசில்தார் தவிர்த்து, மற்ற மூவருக்கும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, மூவரும் தங்கள் சொந்த ஊதியத்தில் இருந்து, மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். அதேநேரம் உத்தரவை அமல்படுத்த வேண்டிய தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ஒரு மாத ஊதியத்தை, அவர் மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தாசில்தாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வழக்கில், வி.ஏ.ஓ., யமுனா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேல்முறையீடு

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், குன்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர், தனி பட்டா கோரி வழக்கு தொடர்ந்தார். அதேபோல, கோவை வெள்ளலுார் பகுதியை சேர்ந்த முருகாத்தாள் என்பவர், தன் புகார் மனு மீது இறுதி முடிவு எடுக்கும் முன், பெருமாள் என்பவருக்கு இ- - பட்டா வழங்க கூடாது என, வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, இருவரும் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். இதில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ராமன், கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல சிறப்பு தாசில்தார் ஸ்ரீமாலதி, மதுக்கரை தாசில்தார் ஏ.சத்யன், வெள்ளலுார் வி.ஏ.ஓ., விஜயகுமார் ஆகியோருக்கு, தலா ஒரு மாத சிறை தண்டனையும், தலா, 25,000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.மேலும், அபராதத் தொகையை மனுதாரர்களுக்கு இழப்பீடாக வழங்கவும், தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக, ஒரு மாதம் நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார். அபராதத் தொகையை அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யவும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
மே 25, 2025 07:44

இதெல்லாம் கதைக்கு ஆகாது. நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வரி செலுத்தும் பொது மக்களுக்கு எதிராக நடந்து கொள்பவர்களின் சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வரம்புக்குள் பிஎப் தொகை உட்பட அனைத்தும் அரசுக்கு செல்ல வேண்டும் என்ற அளவில் இருந்தால் பயப்படுவார்கள்.


Manaimaran
மே 25, 2025 04:27

அதென்ன ஒரு மாதம். அது மற்றவர் கு ஏன் கிடைப்பதில்ல


Karthik
மே 25, 2025 06:42

சாமானிய மக்கள் சுப்ரீம் கோர்ட் வரை செல்வது சாத்தியமில்லை. அதுவே அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றால் சுப்ரீம் கோர்ட்டில் சென்று தடை வாங்கி விட முடியும். இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பல வழக்குகள் உதாரணம்.


மீனவ நண்பன்
மே 25, 2025 03:44

டாஸ்மாக் கனிம வள கொள்ளைகளில் மட்டும் வாய் மூடி காதுகளையும் கண்களையும் மூடிக்கொள்வார்கள்


Padmasridharan
மே 25, 2025 01:37

மனுதாரருக்கு வாழ்த்துகள்.. சமூக நீதி வளர்க. .இதுபோல் எல்லா அதிகாரிகளுக்கும் சிறை தண்டனை விதித்து வேலைய விட்டு எடுத்துட்டா லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்களை ஒழித்துவிடலாம்.