சென்னை: தமிழகத்தில், 11 இடங்களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைக்க, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான நிலையில், அவற்றுக்கான இடங்களை உடனே தேர்வு செய்யும்படி, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உயர் கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.இதுகுறித்து, உயர் கல்வி துறை செயலர் சமயமூர்த்தி கூறிதாவது:
தமிழகத்தில் உயர் கல்வியில் சேரும் மாணவ - மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் வாயிலாக, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தக்க வைக்கும் வகையில், குன்னுார், நத்தம், ஆலந்துார், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதுார், பெரம்பலுார், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில், புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைப்பதற்கான அறிவிப்பு, பட்ஜெட் உரையில் இடம்பெற்றது.கடந்த மாதம் முதல்வர், கடலுார் மாவட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தில், பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில், 11 இடங்களிலும் கட்டடங்களை கட்டும் வகையில், நகர பகுதியில் மூன்று ஏக்கர், கிராமப் பகுதியில் ஐந்து ஏக்கர் இடத்தை தேர்வு செய்ய, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த ஊர்களில் அடுத்த கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையை துவக்கி, தற்காலிக வகுப்பறைகளில் பாடங்களை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கல்லுாரிகளில் 2வது 'ஷிப்ட் '
15,000 மாணவர்களுக்கு 'சீட்'தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பல்வேறு படிப்புகளுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதாவது, 100 இடங்கள் மட்டுமே உள்ள ஒரு படிப்புக்கு, 2,000 மாணவர்கள் கூட விண்ணப்பிக்கின்றனர். அதுபோன்ற பாடங்களுக்கு, இந்தாண்டு முதல், 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், இரண்டாம் பாடவேளை அதாவது இரண்டாவது 'ஷிப்ட்' முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை கூடுதலாக்கவும், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.