சேலம்: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், முதல் பரிசை வென்ற 'வீரப்பன்' காளைக்கு, சொந்த ஊரான சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில், பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, மேள வாத்தியம் முழங்க ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.உலகப்புகழ் பெற்ற மதுரை, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி, இந்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. கிராம கமிட்டி சார்பில் முனியாண்டி, அரியமலை, வலசை கருப்பசாமி கோவில்களை சேர்ந்த மூன்று காளைகளுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்ட பின் காளைகள் அவிழ்க்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு கலர் சீருடையில், தலா 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i3cr9hll&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை ரவுண்டு கட்டி வீரர்கள் விரட்டி பிடித்தனர். தில் காட்டிய காளைகள் வீரர்களை முட்டித் துாக்கி எறிந்து பறக்க விட்டன. வெற்றி பெற்ற வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, தங்க மோதிரம், சைக்கிள், அண்டா, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டியில் 20 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக, சேலம் அயோத்தியா பட்டினத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான வீரப்பன் என்ற காளைக்கு டிராக்டர் மற்றும் கன்றுடன் நாட்டு பசு வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று காலை காளையுடன் மோகன்ராஜ் மற்றும் குழுவினர் ஊர் திரும்பினர். அவர்களுக்கு சொந்த ஊரான சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாசு வெடித்தும், காளைக்கும், அதன் உரிமையாளருக்கும் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் ஊர் மக்கள் வரவேற்பு அளித்தனர். அயோத்தியாப்பட்டணம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று, மகிழ்ச்சியை கொண்டாடினர்.