உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிணற்றை காணோம் காமெடி: 75 அடி ஏர்செல் மொபைல் டவர் அபேஸ்

கிணற்றை காணோம் காமெடி: 75 அடி ஏர்செல் மொபைல் டவர் அபேஸ்

சேலம்: 'ஐயா ஏன் கிணத்த காணோம்'னு நடிகர் வடிவேலு ஒரு படத்தில் பதறியபடி காவல் நிலையத்திற்கு ஓடி வரும் காமெடி காட்சி இடம் பெறும். அதேபோல, ஏழு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ஏர்செல் நிறுவனத்தின் மொபைல் போன் சிக்னல் கோபுரம், சேலத்தில் காணாமல் போனதாக, அந்நிறுவன செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்.சேலம், கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பிரதான சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில், 'ஏர்செல்' நிறுவனம் சார்பில், 2016ல், மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டது. கடந்த, 2018ல் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டது. பல ஆண்டுகளாக, அதற்கான வாடகை தரப்படவில்லை. மொபைல் போன் நிறுவனத்தில் இருந்தும், அந்த வீட்டினரை தொடர்பு கொள்ளவில்லை.இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்நிறுவனத்தின் மொபைல் போன் கோபுரங்கள் மாயமாகி வருவதாக தகவல் வந்ததால், அந்நிறுவன செயல் அலுவலரான, சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன், இரு நாட்களுக்கு முன், சேலம், எருமாபாளையம் பிரதான சாலையில் வைக்கப்பட்ட மொபைல் போன் கோபுரத்தை பார்வையிட வந்தார்.அப்போது, அங்கு 17.74 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த, 75 அடி உயர மொபைல் போன் கோபுரம் இருந்த தடமே தெரியாத அளவிற்கு மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த தமிழரசன், அந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது, 'சில ஆண்டுக்கு முன், சிலர் மொபைல் போன் கோபுர பாகங்களை பிரித்து, லாரியில் எடுத்துச் சென்றனர். நிறுவனம் மூடப்பட்டதால், அவர்கள் தான் எடுத்துச் செல்கின்றனர் என, யாரும் கண்டுகொள்ளவில்லை' என, கூறினர். இது குறித்து, தமிழரசன் நேற்று முன்தினம் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். துல்லியமாக அந்த கோபுரம் திருடப்பட்ட நாள் தெரியாத நிலையில், போலீசார் பெயருக்கு வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R Suresh
பிப் 17, 2025 13:45

அந்த ஏர்செல் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் 8 ஆண்டுகளா வாடகை தராமல் இருந்தது முதல் தவறு


Bhaskaran
பிப் 17, 2025 11:52

காவல் நிலையங்களில் வாசலில் கிடக்கும் திருட்டில்மீட்கப்பட்ட வாகனங்கள் வெறும்கூடுமட்டும் இருக்கும் உள்பாகங்கள் எப்போதோ காணாமல் போயிருக்கும்


Sampath Kumar
பிப் 16, 2025 12:19

தோல் இருக்க சுளை முழுங்கி என்பது இதான் போல தமிழ் நாட்டில் ஏதை திருடுவது என்ற விவஸ்தை இல்லாமல் போச்சு


நிக்கோல்தாம்சன்
பிப் 16, 2025 08:06

தமிழரசன் மீதும் கேஸ் போட்டிருக்கவேண்டும் , இன்னொருவர் இடத்தில் வாடகை தராமல் இவ்வளவு ஆண்டுகள் எப்படி வைக்கமுடிந்தது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை